தம்பி! நாங்கெல்லாம் பேசாத கடவுள் மறுப்பா? எல்லாம் ரத்தம் சுண்டுனா சரியாய் போய் விடும்..
இப்படி பேசுபவர்களை கண்டால் முதலில் சற்று எரிச்சல் வரும் இப்பெல்லாம் அனுதாபமே வருகிறது.சரி இவங்களுக்கு எப்ப இரத்தம் சுண்டுச்சுன்னு பார்த்த எல்லாம் ஒரு கால்கட்டு போட்ட சரியாயிடும் அங்கதான்..
புண் உள்ள இடத்தில் தான் கட்டுப்போட வேண்டும் சம்பிரதாயத்திற்காய் காலில் கட்டு போடுவதால் ஏற்படும் சமுகத்தில் ஏற்படும் புண் பற்றி யாருக்கும் கவலையில்லாததால் அப்புண் புரையோடியுள்ளது,அதற்கு களிம்பு தடவி சரி செய்ய முடியாது அறுவை சிகிச்சை அவசியம்.
நம் சமூகத்தில் சாதி முறை என ஆரம்பித்து பக்கங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை எனெனில் இக்கட்டுரையை சற்று முற்போக்கு பேசுபவர்களே படிக்கும் படி எழுதியுள்ளேன்(அவர்கள் படிச்சு கிழிச்சலே போதும்) என் கோபத்திற்கான விடை இறுதியில் ஆக நேரடியாக விசயத்திற்கு வருவோம்....
கடவுள் மறுப்பு பேசுபவர்களை இங்கே இருவிதமாக பிரிப்போம்.அதாவது நம் சமூகத்தில் நிலவும் நாம் விருப்பபட்டு ஏற்று கொண்ட அல்லது நம் மேல் திணிக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை அதனால் ஏற்பட்ட தலைமுறை(வாழ்வியல் கால அளவு தொடர்ச்சி) என்பதன் மூலம்
1.முதல் தலைமுறை பகுத்தறிவுவாதிகள்
2.ஒன்றுக்கு மேற்பட்ட தலைமுறை பகுத்தறிவுவாதிகள்..
முதலில் 2 ம் வகையினரை பற்றி பார்ப்போம்
தன்னுடைய பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் இயல்பாக பகுத்தறிவுவாதிகளாக இருப்பதால் இவ்வழிக்கு வந்தவர்கள், இவ்விடத்தில் இன்னொன்றையும் ஆராய வேண்டும்,கரடுமுரடான இப்பாதை வழக்கம்போல்(மூத்தோர் சொல்லே வேதவாக்கு) என்றிருக்காமல் தன் அறிவுக்கும் சற்று பொருத்தி பார்த்து சரி என வருபவர்களே என்பதில் மாற்று கருத்திருக்காது..
என்னுடைய மகனும் என்னைப்போல சிறந்த பகுத்தறிவுவாதியாக வாழ்கிறான் எனப்பெருமைப் பட்டுக்கொள்ளும் தந்தைக்கும்,மகனின் வளர்ச்சியை பார்த்து பெருமை கொள்ளும் தந்தை(மதவாதி) எவ்வித்தியாசமும் இல்லை,நோக்கம் உயர்வானது உணர்வு ஒன்றே!..
ஆக, இம்மாதிரியான தோழர்களுக்கு எதிர்ப்பிருக்காது.இவர்கள் வெளியில் பேசும் எதையும் வீட்டினுள்ளும் பேசலாம்.இவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக அமைத்துக்கொள்ளலாம்.எவ்வித ஆதரவும் உண்டு..
இப்ப முதலாமவர்களையும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் பற்றி ஆராய்வோம்..
சாமி இல்லையின்னு சொன்னான்! பரவாயில்லை சீக்கிரம் சாமி நல்ல புத்தியை தருமுன்னு நிணைச்சோம்,பாவிப்பய இப்ப சாதியில்லைங்கறான்.நமம சனம் எப்படி ஏத்துக்கும்...
இப்படிபட்ட பேச்சுகளுக்கிடயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்...
பெரியாரியம் ஒரு ஈர்க்கதக்க தத்துவமா? இல்லை போதை தரும் பொருளா? அது ஒரு மருந்து காயமுள்ளவனுக்கு தேவைப்படும்.
இப்ப நம்ம பார்த்த முதல் தலைமுறை பகுத்தறிவுவாதிகளில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எல்லோருக்கும் இது ஒரு மருந்து,அவர்களின் இரட்டை குவளை,செருப்பில்லா கால் என எல்லாவற்றிருக்குமான மருந்து அது..
சரி, இவர்கள் இப்படியென்றால் பிற்படுத்தபட்ட சமுகத்திலிருந்து வந்து பெரியாரியம் பேசுபவர்களுக்கு இது மருந்தா? வலியே இல்லாதவர்களுக்கு எதற்கு மருந்து?இவர்கள் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்களாகவும் நன்றியுணர்ச்சியுள்ளவர்களாகவும் உள்ளார்கள்.
மேற்கூறிய இரு வேறுபட்ட நிலையிலுள்ள தோழர்களும் தங்களின் பொருளாதார போராட்டங்களிடையே வாழ்வை பல்வேறு இடையூறுகளிடையே எதிர்கொள்கின்றனர்.அவ்வகையில் திருமணம் எனும் நிகழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மிக அதிகம்.
அடிப்படையாய் முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சாதி ஒழிய சாதிக்குள் கலப்பு ஏற்பட வேண்டும்,அவ்வகையில் உருவாகும் வருங்கால தலைமுறைகள் சாதீய அடையாளம் அற்றவர் ஆகி விடுகிறார்கள்,அதற்கான முறைகளை வரிசைப்படுத்துவோம்..
1.சாதியை மறுத்து சடங்களுடன் நடைபெறும் திருமணங்கள்(குளிப்பாட்ட வண்னாண்,செருப்பு மாட்டும் சக்கிலியன,மந்திரம் ஓதும் பார்ப்பான்) பெரும்பாலும் பெற்றோர் அனுமதியுடன் நடைபெறும் காதல் திருமணங்களாக இருக்கும் இதில் கூட நாம் நிணைப்பது சாத்தியமே,சடங்குகள் முடிந்தவுடன் சுவடுகள் அழிந்து போகும் உருவாகும் சுவடு கலப்பினமாய் இருக்கும்.இதிலிருக்கும் இன்னோர் சிக்கல் பிறக்கும் குழந்தை அப்பாவின் சாதியாய் வளரும் அதன் திருமண வயதில் பெற்றோர் ஆதிக்கம் இருக்கும்.
2.சாதி மற்றும் சடங்குகளை மறுத்து நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் இதைத்தான் தீர்வாக பெரியார் சொன்னார், இதிலும் இருவகை உண்டு காதல் திருமணங்கள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள்.
இதில் காதல் திருமணங்களாக நடைபெறுபவை போராட்டங்கள் நிறைந்தவையாக இருக்கும், 2ம் தலைமுறை பகுத்தறிவுவாதி என்றால் கூட காதலித்த ஆண் அல்லது பெண்னிற்காய் சரி சடங்கு தானே போனால் போகட்டும் என செய்து விட்டு,பிறகு எவ்வித அடையாளங்களும் இல்லாமல் வாழ்வார்கள்..
ஆக சாதியை மறுக்கும் திருமணங்களில் இழையோடுவது காதல் என மேற்கூறியவற்றில் பார்த்தோம், இயல்பாகவே காதலிக்காத தோழர்களின் நிலை என்ன?
என்னுடைய பையனுக்கோ,பொண்னுக்கோ உறுதியாய் வேறு சாதியில் தான் திருமணம் செய்து வைப்பேன் நான் செய்த தவறை அவர்களும் செய்ய வேண்டாம்...
நீ..யாரை வேண்டுமானாலும் காதலி, ஆனால் நம்ம சாதிக்குள்ள வேண்டாம்...
இது என் காது குளிர நான் கேட்ட பகுத்தறிவுவாதிகளாக உள்ள பெற்றோரின் வார்த்தைகள்...
இப்ப,நிணைத்து பாருங்க முதல் தலைமுறை சேர்ந்த காதலிக்க தவறிய தோழர்கள் நிலையை?
தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளில் எதாவது ஒரு பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா? பொதுவா பேசறதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லுவார்கள், ஆக உளறல் நாயகன் பாணியில் இக்கட்டுரையை எழுதும் நானே கட்டுரையின் கருவும் ஆனேன், ஆம் காதலிக்க தவறிய கொள்கையில் உறுதியாக இருக்க நிணைக்கும் முதல் தலைமுறை தோழர்களில் நானும் ஒருவன்..எனக்கு ஏற்பட்ட அனுபவங்களாய் இக்கட்டுரையை தொடர்கிறேன்..
பொருளாதாரத்தில் என் சொந்த காலில் நிற்பதாலும் ஓரளவு தெளிந்த நிலையில் இருக்கும் பெற்றோர்களாலும் சுயமரியாதை திருமணம் என்பது சற்று போராடினாலும் எனக்கு எட்டுவதாகவே தெரிந்தது..
சரி, இருக்கவே இருக்கு மையங்கள் பதிவோம்,தேடுவோம் எனத் தேடினால் ஏமாற்றம்தான் மிச்சம்,தேடலில் எனக்கு கிடைத்தவை...
தமபி! உங்களுக்குத்தான் பெண் தேடறீங்களா? பெரியங்க யாரும் பேச மாட்டாங்களா?(அனுமதித்தே பெருசு எங்க போய் பேசறது)
எதுக்கு தோழா! ரிசுக் எடுத்துக்கிறீங்க,வீட்டில் சொல்ற மாதிரி செய்யுங்க! பிறகு நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம்(முதல்ல கருப்பு சட்டையை கழட்டி வீசுடா என கத்த வேண்டும் போல இருந்தது)
நான் இந்த துறையில் இருக்கிறேன், எனக்கு அதே துறையிலேயே இருக்கும் துணை வேண்டும்(வாழ்க்கை ஒப்பந்தமா?வியாபார ஒப்பந்தமா? என்ற கேள்வி எனக்குள் இப்போது)
படிப்பு குறைவா இருக்கே நான் நிறைய படிச்சுட்டேன்(வீட்டிலேயே சும்மா இருப்பவர்கள் கூட சொல்கிறார்கள்)
உங்க சாதிக்குள்ளேயே நம்ம ஆளுகளா தேடுங்க என அறிவுரைப்பவர்கள்.
நான் மேல் சொன்ன அனைவரும் பெரியாரியல்வாதிகள், நான் அவர்களை குறை சொல்லவில்லை இருந்தாலும் எதற்கு முக்கியதுவம் தருகிறார்கள் என்ற வருத்தமே...
இவ்விடத்தில் மற்றுமொறு முக்கிய நிகழ்வையும் சொல்லியாக வேண்டும், எனது பெற்றோர் சாதி ஆதிக்கம் நிறைந்த சாதியில் பிறந்தவர்கள், எனவே பார்க்கறதுதான் பார்க்கற பொழங்கற சாதியாப்பாரு என்றனர்.
சுயமரியாதை திருமண முறை சட்டமாக்கபட்டது தோழர் ஐவாவின் மகள் திருமணத்தின் போதுதான்,அப்போது மாப்பிள்ளை பார்த்த பெரியார்,பெண் வீட்டிற்கு தோழர்கள் நல்லகண்னு,மணலி கந்தசாமி ஆகியோரை அனுப்பியுள்ளார் அப்போது பெண்னின் தாயார் கேட்ட கேள்வி பையன் புழங்கற சாதியா?
பொதுவாகவே நாங்க சாதி பார்க்க மாட்டோம், ஆனா புழங்காத சாதியா இருந்தா மகள் சிரமப்படுவாள் எனக்கூறிய பகுத்தறிவுவாதிகள் ஆகியோரைப்பார்த்த போது என் அம்மா எவ்வளவோ முற்போக்கு..
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்னின் தந்தை எங்களிடம் கேட்டது பெற்றோர் சம்மதம் கட்டாயம் வேண்டும்(யாருக்கு திருமணம் என்பதே தெரியல போலும்)
அப்படி இப்படி என 2 ஆண்டுகள் ஓடிவிட்டன, இப்ப பிரச்சனை எப்படி போகுதுன்னா...
உனக்கு கொடுத்த காலம் முடிந்து விட்டது கருப்புசட்டைக்காரன் எவனும் உனக்கு பொண்னு தரப்போறதில்லை, இனி நாங்க பார்க்கிறோம் சரியான கட்டமைப்பு வைத்திருக்கும் மதவாதிகளுக்கு சுலபமான காரியம் இது...
இப்ப, என் நிலை சரி நம்ம சாதியா இருந்தாலும் பரவாயில்லை சடங்காவது இல்லாம பார்த்துக்கொள்ளலாம் என்ற என் நிலையில் இப்போது மற்றுமொறு அழுத்தம்...
கொள்கை பேசற வெங்காயங்கள் இப்படினா,மதவாதிகள் பையன் சாமி கும்பிடமாட்டானாம்,செயிலுக்கெல்லாம் போயிட்டு வந்தவனாம் என இருவர் தட்டி கழித்தவுடன் என் பெற்றோர் நிலை பொய் சொல்வது அதை உண்மையாக்க என் மீதான அழுத்தம்.
கடவுள் மறுப்பு கல்யானம் வரை பேசாதே,பார்ப்பான் வந்து திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,கண்ட கட்சியில சேர்ந்து வாசுது இல்லாம வீட்டை கட்டி சிரமம் பாரு..
அட, இப்படித்தான் இரத்தம் சுண்டுவதா? இப்ப புரியுதுங்களா? முதல் பக்கத்தில் பெருசுக மேல ஏற்பட்ட அனுதாபம்...
நியாமோ இல்லையோ தெரியல இப்ப என் கோபமெல்லாம் தோழர்கள் மேலதான்..
தம்பி..ஆதிக்க சாதியில பிறந்து சொந்தமா தொழில் செய்யும் உங்களுக்கே சுயமரியாதை திருமணம் செய்வதில் இவ்வளவு சிரமம் என்றால் நானெல்லாம் என்ன செய்வது? ஒடுக்கப்பட்ட சமுகத்திலிருந்து வந்து ஒரு சாதி சடங்கு திருமணம் செய்த தோழனின் குரல் நிறைய சிந்திக்க வைத்தது..
தோழர்களே!
நாம் அடைய நிணைக்கும் சாதி,மத,வர்க்க பேதமற்ற நிலை வர குடும்பம்,சொத்து,வாரிசு அதை ஒட்டி நடைபெறும் திருமண அமைப்பும் மாற வேண்டும், இவைகள் உடைய வேண்டாம் உதிர வேண்டும்,நாம் தான் உதிர்க்க வேண்டும்...
ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிதாக்க பக்கத்தில் பெரிய கோடு போடுவது தாத்தா காலத்து பார்முலா, ஆம் பகுத்தறிவுவாதிகள் குடும்பங்களாக இணைய வேண்டும்,நிறைய குடும்ப விழாக்கள் நடைபெற வேண்டும் அதன் மூலமே நிறைய சாதிக்க முடியும்..
முற்போக்கு அமைப்புகள் சரியான வாழ்க்கை திட்டத்தை தயார் செய்ய வேண்டும், கருப்பு சட்டை தலைவர்கள் தாலி எடுத்து தருவதை நிறுத்த வேண்டும்..
சுயமரியாதை திருமணம் செய்வதாய் உறுதியாய் முடிவெடுத்தால் அது அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் வேலைத்திட்டமாய் மாற வேண்டும்...
என் அன்புத் தம்பிமார்களே! தயவு செய்து வேறு சாதியில் காதலியுங்கள் இல்லையேல் இவர்கள் உங்களையும் கட்டுரை எழுத வைத்து விடுவார்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
Awesome post....
ReplyDeletewhy blood?
ReplyDeletesame blood!
(எனக்கும் அதே பிரச்சனை தான்! கட்டுரை எழுதுற அளவுக்கு அறிவோ இல்லை அமைப்புகளின் தொடர்போ இல்லை)
தோழர். யதார்த்த நிலைய புட்டு புட்டு வைத்துள்ளீர்கள். உண்மையான கொளகையாளனின் மன்க்குமுறலை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் இந்த கட்டுரையில். உங்கள் வாழ்க்கை இணையருக்கு நன்றியை சொல்லுங்கள். ஜாதியற்ற,மதமற்ற, பேதமற்ற பிள்ளைகளை, சமுதாயத்தை உருவாக்குவோம். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
ReplyDelete