Mar 5, 2009

யார் தமிழர்???

யாதும் ஊரே யாவரும் கேளீர்....
தங்களின் மிக நியாயமான நேர்மையான கால் நூற்றாண்டு கால போராட்டத்திற்கு, உலக நாடுகள் முழுவதும் வேர் பரப்பி வாழும் தம் சொந்தங்களின் மூலம் ஆதரவு திரட்டுபவர்கள் ஈழத்தமிழர்களே ....

தீதும் நன்றும் பிறர்தர வாரா....
எதிரி தன் பலத்தை கூட்ட உலகம் முழுவதும் ஆயுதப்பிச்சை ஆள்பிச்சை எடுத்து மிக உக்கிரமாக தாக்கினாலும் தன் தாயக விடுதலையை உயிர் மூச்சாக கொண்டு தனித்து போராடி வரும் இராணுவம் ஈழத்தமிழர்களே ...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு .....
ஈழத்தமிழர் நலனுக்காய் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒரு சமயத்தில் இலட்சக்கணக்கான மனித சக்தியை திரட்ட முடிகிறது. இது இவர்களால் முடிந்தது. உலகம் முழுதும் ஓடி ஓடி உழைத்து தம் நாட்டு விடுதலைக்கு வலு சேர்க்கும் தன்னலமற்ற உறவுகள் ஈழத்தமிழர்களே...

ஆறுவது சினம் .. ஊக்கமது கைவிடேல் ....
தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகுதியான துரோகங்களுக்கிடையேயும் தங்கள் உறுதியான நம்பிக்கையை கை விடாமலும் இந்தியாவை தொடர்ந்து தன் நண்பனாகவே நினைப்பவர்கள் ஈழத்தமிழர்களே ....

யாகாவாராயினும் நா காக்க.....
சிறுபிள்ளைத்தனமாகவும் தன் நலமாகவும் எந்தவொரு கருத்தையும் கூறாமலும் மிகுந்த வேதனைமிக்க வாழ்க்கையிலும் துரோகங்களையே தொடர்ந்து சந்தித்தபோதிலும் நா காத்து எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருப்பவர்கள் ஈழத்தமிழர்களே ...

கபடி.... கபடி....
இது தமிழனின் விளையாட்டு தமிழனின் குணமே காலை வாரி விடுவதுதான் என்று கேலி பேசியபோது, இல்லை இல்லை இது என் எல்லை அது உன் எல்லை , எல்லை தாண்டி வரும் எதிரியை ஒன்று சேர்த்து வீழ்த்துவதே கபடி, இதை உலகுக்கு உணர்த்தியவர்கள் ஈழத்தமிழர்களே....

சொந்தங்களே....
நம் அடையாளங்கள் யாரால் காக்கப்படுகிறது?
அவர்களின் நிலை என்ன?
மிக அழகான தமிழ் பெயருடன் ஒருவர் ஐரோப்ப, அமெரிக்க கண்டங்களில் அறிமுகமானால், நீங்கள் சிறிலங்காவில் இருந்து வந்தீர்களா? என கேட்பான்

இப்படியோர் இனம் முற்றாக அழிக்கப்பட்டால்?....
கடைத்தமிழனும் இலங்கைத்தீவில் அழித்தொழிக்கப்பட்டால்?....

நாளைய வரலாறு நம் பிணங்களை கூட விட்டுவைக்காது !!!
உங்களை துப்பாக்கி தூக்க சொல்லவில்லை ஒரு குரல் நம் சொந்தங்களுக்காய்...

நம் போராட்டங்கள் தொடர வேண்டும் .
மெரீனாவில் புதைக்க காத்திருப்பவர்கள் பின்னால் செல்லாமல்,
மூலக்கொத்தளத்தில் விதைக்கப்பட்டிருக்கும் நம் தோழன் விட்டுச்சென்ற பணி தொடர்வோம்....
தோழர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை மிக வெளிப்படையாகவும் நேரிடையாகவும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக தரும் அரசியல் கட்சிகளையே தேர்வு செய்யுங்கள்.....

1 comment:

  1. சிறப்பான நடை. ஆம் உயிராயுதம் எடுத்தவன் வழியில் வாக்காயுதம் எடுப்போம்!

    ReplyDelete